

தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின்கீழ் கல்வி பயின்று, தற்போது உயர் கல்வி படித்து வரும் 3 மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வி மற்றும் அதைச்சார்ந்த செலவினங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் ராஜேஷ் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.
இது குறித்து அவர் கூறும் போது, கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் புளி மண்டியில் வேலை செய்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு தற்போது கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி அபிபுனிஷாவிற்கு ரூ. 7 ஆயிரத்து 500ம், காவேரிப்பட்டணம் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து தற்போது பி.லிட்., படித்து வரும் தமிழரசிக்கு ரூ. 5 ஆயிரமும், பேக்கரியில் வேலை செய்து தற்போது எம்.எஸ்சி., படித்து வரும் வடிவேலுக்கு ரூ.7 ஆயிரத்து 500ம் என மொத்தம் ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலையினை கல்வி மற்றும் கல்வி சார்ந்த செலவினங்களுக்கான தன் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், ஓசூர் சார் ஆட்சியர் பிரவீன் பி.நாயர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வராஜ், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.