

ரூ.2,240 கோடி தொகையை 6 பொதுத்துறை வங்கிகள் சட்ட விரோதமாக அயல்நாட்டுக்கு அனுப்பிய வங்கி ஹவாலா மோசடியை வருவாய் உளவுத்துறை இயக்ககம் கண்டுபிடித்துள்ளது.
சரக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் சிலரின் போலி ஆவணங்களின் பேரில் இந்த தொகை வங்கிகளிலிருந்து கைமாறி பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளது.
6 பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் துணையுடன் ஏற்றுமதி பில்களின் தொகையை கூடுதலாக காண்பித்ததோடு அல்லாமல் சில இல்லாத இறக்குமதிகளின் பேரிலும் இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் உண்மையான மதிப்பு ரூ.60 கோடிக்கு மேல் இல்லை, என்று பெயர் கூற விரும்பாத வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போலி வர்த்தகக் கும்பல் தெற்கு மும்பையில் ஒரேயொரு அலுவலக அறையை எடுத்து அங்கிருந்து இந்த வேலைகளைச் செய்துள்ளனர். இந்த ரூ.2,240 கோடி தொகையில் ரூ. 1,398 கோடி ரூபாய் மாண்ட்வியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையிலிருந்தே சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
எந்த ஒரு ஆவணங்களையும் சோதிக்காமல், வாடிக்கையாளர்களின் அடையாளங்களையும் சரிபார்க்காமல், சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்தனை குறித்த புகாரை நிதி உளவுத்துறைக்குத் தெரிவிக்காமல் இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளன.
பண மோசடி:
இது குறித்து டி.ஆர்.ஐ அதிகாரி கூறும்போது, “அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டமும் மீறப்பட்டுள்ளன. அயல்நாடுகளுக்கு பணம் அனுப்புவதை கட்டுப்படுத்துவது இந்தச் சட்டமே. தற்போது மோசடி நடந்துள்ள இந்தத் தொகைக்கு சட்ட வரலாறுகள் இல்லை. எனவே இது மோசடி பணமாகத்தான் இருக்க வேண்டும்.
மறைவு வர்த்தகம் செய்துள்ள கும்பல் தற்போது தெற்கு மும்பை அலுவலகத்தை காலி செய்து கோண்டு தலைமறைவாகியுள்ளனர், அந்த இடத்தில் சில ஆசாரிகள் வேலை செய்து வருகின்றனர்.
இது குறித்து கட்டிட ஒப்பந்த நிறுவனம் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்த போது, “ஸ்டெல்கன் ஊழியர்கள் ஒரு மாதம் முன்பே காலி செய்து விட்டனர்” என்றார். “அந்த அலுவலகத்தை நிர்வகித்தவர் ஹனீபா ஷெய்க் என்ற பெண்மணியாவார். இந்த அலுவலகம் இப்போது எங்கிருந்து இயங்குகிறது என்பது தெரியவில்லை” என்றார்.
தெற்கு மும்பையில் உள்ள கனரா வங்கி கிளை ரூ.340 கோடி அளித்துள்ளது. முக்கால்வாசி போலி ஆவணங்கள் தெற்கு மும்பையில் உள்ள டிஸ்னி இண்டெர்னேஷனல் என்ற நிறுவனம் தயாரித்து அளித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்னவெனில், அடையாளம் இல்லாத நிறுவனங்கள் பெயரில் சரக்குகள் பில் செய்யப்பட்டுள்ளன, அதாவது இவர்கள் தெற்கு மும்பையின் அடையாளம் தெரியாத தங்க, வைர நகை வியாபாரிகளுக்காக போலி வர்த்தக நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என்று தெரிகிறது.
“வைர மற்றும் நகை வியாபாரிகள் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் இந்த மோசடியை நடத்தியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் ஐஸ்கேட் என்ற இ-பேமண்ட் வழியே நுழைவதற்கு இந்த போலி பில்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் உதவியுள்ளனர்” என்று வருவாய் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கனரா வங்கி பொதுமேலாளர் ஏ.கே.தாஸிடம் கேட்ட போது, அன்னிய செலாவணி மோசடி குறித்த விசாரணையை டி.ஆர்.ஐ மேற்கொள்வதாக எங்களுக்கு எந்த செய்தியும் இல்லை, மும்பையில் இது குறித்த புகார்கள் இதுவரை எழுந்ததில்லை” என்றார்.
இது குறித்த விசாரணை முடியும் தறுவாயில் இருப்பதாக கூறிய வருவாய் உளவுத்துறை விரைவில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.