

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் பிறந்தநாள் விழாவுக்கு தலிபான் தீவிரவாதிகளும் தாவூத் இப்ராஹிமும் நிதியுதவி செய்கின்றனர் என்று உத்தரப் பிரதேச மூத்த அமைச்சர் ஆசம்கான் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாள் விழா உத்தரப் பிரதேசத் தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 நாள் விழா ராம்பூரில் நேற்று தொடங்கியது. சுமார் 14 கி.மீட்டர் தொலைவுக்கு வாகனப் பேரணி நடைபெற்றது. லண்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்பு வாகனத்தில் முலாயம் சிங், ராம்பூர் நகரில் ஊர்வலமாக வந்தார். அவரது வயதைக் குறிக்கும் வகையில் 75 அடி நீள கேக் தயார் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற விழாவில் முலாயம் சிங் அந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதில் முலாயம் சிங்கின் மகன் முதல்வர் அகிலேஷ் யாதவ், 40 அமைச்சர்கள் உட்பட வி.வி.ஐ.பி.க்கள் பலர் கலந்து கொண்டனர். 50 கார்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன.
20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். பிரபல பாடகர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராம்பூரில் இன்று நடைபெறும் விழாவில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அடிக்கல்லை யும் அவர் நாட்டுகிறார்.
பாஜக குற்றச்சாட்டு
முலாயமின் பிறந்தநாள் விழா வுக்கு அரசுப் பணம் வாரியிறைக் கப்படுவதாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த அமைச்சர் ஆசம்கானிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இக் கேள்வியால் ஆசம்கான் கடுமையாக கோபமடைந்தார். அவர் கூறியபோது, தலிபான் தீவிரவாத அமைப்பு, மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிம் ஆகியோர்தான் முலாயம் சிங்கின் பிறந்தநாள் விழாவுக்காக நிதியுதவி செய்கி ன்றனர், இனிமேல் இந்த கேள்வியை என்னிடம் கேட்கமாட் டீர்கள் எனத் தெரிவித்தார்.