

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே (60) டெல்லியில் நேற்று காலமானார்.
மத்திய பிரதேசம் உஜ்ஜைன் மாவட்டம் பட்நகரைச் சேர்ந்தவர் அனில் மாதவ் தவே. ஆர்எஸ்எஸ் மூத்த தலைவராக இருந்த அவர் கடந்த 2009 ஆகஸ்டில் முதல் முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016 ஜூனில் மீண்டும் மாநிலங் களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதே ஆண்டு ஜூலையில் மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சராக நியமிக்கப் பட்டார்.
டெல்லியில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு நேற்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மூத்த டாக்டர் ஒருவர் கூறியபோது, அமைச்சர் அனில் மாதவ் தவேவை காலை 8.50 மணிக்கு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி காலை 9.45 மணிக்கு அவர் காலமானார் என்று தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு அமைச்சர் அனில் மாதவின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள் ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அனில் மாதவ் தவேவின் மறைவுக்கு மத்திய பிரதேச அரசு 2 நாள் துக்கம் அனுசரிக்கிறது.
இதனிடையே அனில் மாதவ் வசம் இருந்த சுற்றுச்சூழல், வனத்துறை பொறுப்பு அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.