

குஜராத், உனாவில் பசுமாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அடையாள அட்டை உள்ளிட்ட போதிய பாதுகாப்பு இல்லாமல் இறந்த கால்நடைகளின் தோலை உரிக்கவோ, அதனை அப்புறப்படுத்தவோ மாட்டோம் என்று தலித் அமைப்புகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் சுரேந்திர நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகரசபை பணியாளர்களே சுமார் 80 இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இறந்த கால்நடை தோல் உரிப்பவர்கள் கடந்த ஒரு வாரமாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். எனவே நாங்கள் நகராட்சி ஊழியரைக் கொண்டே இப்பணிகளை நிறவேற்றி வருகிறோம் என்று சுரேந்திர நகர் மாவட்ட ஆட்சிய உதித் அகர்வால் தெரிவித்தார், மேலும் தலித் அமைப்பினர் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் அவர்களுடன் இது குறித்து விவாதித்து நல்ல முடிவுக்கு வருவோம்.
இப்போதைக்கு இந்த விவகாரம் முடியும் வரை காத்திருந்து பிறகு தலித தலைவர்களுடன் கூடி விவாதித்து கோரிக்கைகளை பரிசீலிப்போம். இதுவரை 88 கால்நடைகளின் தோல் உரிக்கும் பணியையும், அப்புறப்படுத்தும் பணியையும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மல்தாரிகள் (கால்நடை வளர்ப்பவர்கள்) ஆகியோரது உதவியுடன் நிறைவேற்றியுள்ளோம்.
தலித் மானவ் அதிகார் இயக்கம், இதுதான் பல தலித் உரிமைக் குழுவின் தலைமை அமைப்பு, இந்த அமைப்புதான் தற்போது வேலைநிறுத்தத்தை நடத்தி வருகிறது.
நவ்சர்ஜன் டிரஸ்டைச் சேர்ந்த நது பார்மர் என்பவர் கூறும்போது, “குஜராத்தில் உள்ள எங்கள் சமூகத்தினர் பல்ரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தோலை உரித்து அப்புறப்படுத்தும் பணியை செய்யக் கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். இதனால் மாவட்ட நிர்வாகம் நாளொன்றுக்கு 200 கால்நடைகளின் தோல் உரிப்பு உள்ளிட்ட வேலைகளை தங்கள் பணியாளர்களை வைத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் பாதுகாப்பு, அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும். எங்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் பற்றி உனா சம்பவத்துக்கு பிறகே மக்களுக்கு தெரியவந்துள்ளது. தினப்படி மாட்டுத் தோல் உரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தகைய வன்முறையை சந்தித்து வருகின்றனர். அரசு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வரை வேலை நிறுத்தம்தான்.
மாட்டுத் தோல் உரிப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் பசுமாட்டு கொலையில் ஈடுபடுபவர்களல்லர் என்பது தெரியவரும். மேலும் ஒவ்வொரு தாலுகாவிலும் இறந்த மாடுகளின் தோலை உரிக்க தனியான நிலம் வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.