

பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா தேர்தலில் வெற்றிபெற வேண்டி விடிய விடிய சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார். பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.பொதுசெயலாளர் அனந்த்குமாரும் உட்பட பலர் அதில் கலந்துக் கொண்டனர்.
வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பாக கர்நாடகாவில் களமிறங்கும் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அதில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஷிமோகா தொகுதியிலும், மற்றொரு முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூர் வடக்கு தொகுதியிலும், பா.ஜ.க. பொதுசெயலாளர் அனந்தகுமார் பெங்களூர் தெற்கு தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற வேண்டி பெங்களூர் வடக்கு தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும்,முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா தேர்தலில் வெற்றிபெற வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மங்களூரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பூஜாரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விடிய விடிய சிறப்பு யாகம் செய்தனர். இதில் சதானந்த கவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
அதேபோல பெங்களூரில் உள்ள யஷ்வந்த்பூரில் அவர் புதிதாக திறந்திருக்கும் தேர்தல் அலுவலகத்திலும் விடிய விடிய பூஜை நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களும், சதானந்த கவுடாவின் ஆதரவாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். மேலும் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு ஹோமத்தில் பெங்களூர் தெற்கு தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரும், பா.ஜ.க. பொதுசெயலாளருமான அனந்தகுமார் மற்றும் பெங்களூர் மத்திய தொகுதி வேட்பாளர் பி.சி.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சதானந்த கவுடா தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டதுபோல கர்நாடகா முழுவதும் உள்ள பா.ஜ.க. வேட்பாளர்களும் யாகம் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.