

புலந்த்சாகர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச அமைச்சர் அசம் கான் ஏன் நேரில் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், அவருக்குப் புதிதாக நோட்டீஸ் அனுப்பி வைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூலை 29-ம் தேதி இரவு நொய்டா நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த குடும்பத்தினரை வழிமறித்து அவர்களிடம் இருந்த பணம் உள்ளிட்ட பொருட் களை மர்ம கும்பல் கொள்ளை யடித்தது. அத்துடன் காரில் இருந்த தாயையும், அவரது மகளையும் துப்பாக்கி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து பேசிய உத்தரப் பிரதேச அமைச்சர் அசம் கான் அரசியல் சதி காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் எந்த அளவுக்கும் கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புண்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் அசம் கான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் மாநில போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார். அதே சமயம் வழக்கை விசாரணையை சிபிஐ வசம் மாற்றி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அசம்கானுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் அவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சராக இருப்பவர் பாதிக்கப்பட்ட நபரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கலாமா? இது பேச்சு சுதந்திரத்தின் கீழ் வருமா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பி, அவருக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்கும்படி உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் இவ்வழக்கில் நீதிமன்ற நண்பராக மூத்த வழக்கறிஞர் நாரிமனை நியமிப்பதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு முன் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. அப்போது அமைச்சர் அசம் கான் நேரில் ஆஜராகாததற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரி வித்தனர். மேலும் அவருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பிவைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.