டெல்லியில் இன்னொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

டெல்லியில் இன்னொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது
Updated on
1 min read

அமானத்துல்லா கான் என்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.யை டெல்லி போலீஸார் பாலியல் மற்றும் கொலை மிரட்டல் புகார் தொடர்பாக கைது செய்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் அமானத்துல்லா கான் வீட்டுக்குச் சென்ற போது அவருக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமானத்துல்லா கான் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுப்பினார்.

இதனையடுத்து ஜூலை 10-ம் தேதியிட்ட புகார் குறித்து ஜாமியா நகர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. பிறகு மேஜிஸ்ட்ரேட் மற்றும் போலீஸாரிடம் அளித்த 2 விண்ணப்பங்களிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகவும் துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்தார்.

இதனை அடுத்து அமானத்துல்லா கான் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புகார் கொடுத்த பெண்ணிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், இந்தப் புகார்களை மறுத்த அமானத்துல்லா கான் ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் தான் மீரட்டில் இருந்ததாக் நியூஸ் சேனல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடர புகார் அளிக்குமாறு இந்தப் பெண்ணிடம் ஜாமியா நகர் எஸ்.எச்.ஓ. வலியுறுத்தும் வீடியோ காட்சி ஒன்றை ஆம் ஆத்மி கட்சியினர் வைத்துள்ளனர்.

தென் கிழக்கு டெல்லியில் வாழும் இந்தப் பெண் ஜூலை10-ம் தேதி மின்வெட்டு குறித்து தெரிவிக்க தொலைபேசியில் எம்.எல்.ஏ.வை அழைத்ததாகவும் அவர் பதில் அளிக்காததால் அவரது வீட்டுக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.

“அவரது வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. உள்ளேயிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் வீட்டுக்குத் திரும்ப முயன்றேன். அப்போது வீட்டின் கதவுகளைத் திறந்த இளம் நபர் ஒருவர் என்னை அழைத்து பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து விடுவேன் என்று கூறினார், அதாவது எம்.எல்.ஏ. இவ்வாறு கூறக்கூறியதாக அவர் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in