இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்பிலான சிலையைக் கடத்த முயன்றவர் கைது
இந்திய - நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்பிலான 8 உலோகங்களால் ஆன ‘அஷ்டதாது’ சிலையைக் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் இந்திய - நேபாள எல்லைப்பகுதி வழியாக நேபாளத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தப்படுவதாகச் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஷசாத்ரா ஷீமா பாலின் (எஸ்.எஸ்.பி.) படைப்பிரிவின் 41-வது பட்டாலியன் வீரர்களும், சிலிகுரி யின் கடத்தல் தடுப்பு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, கிஷன்கஞ்ச்- சிலிகுரி இடையிலான சாலை வழியாக சிலையைக் கடத்தத் திட்டமிட்ட பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த புல்கித் ரிஷி பிடிபட்டார். அப்போது, அவரிடம் இருந்த ‘அஷ்டதாது’ சிலை இருந்தது தெரியவந்தது. இந்தச் சிலையை நேபாள கடத்தல் கும்பலுக்கு அவர் கடத்தத் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது. சிலையின் சர்வதேச மதிப்பு ரூ.45 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி சிலிகுரி சுங்கவரித் துறை கண்காணிப்பாளர் முகேஷ் குமார் கூறும்போது, “பிடிபட்ட சிலை பற்றிய வரலாற்றுத் தகவல்களை வடக்கு பெங்கால் பல்கலைகழகத்தின் வரவாற்றுத் துறையிடம் கேட்டுள்ளாம். சிலை யின் எடை சுமார் 24.07 கிலோ உள்ளது” என்றார்.
