பெங்களூரு ஏடிஎம் மையத்துக்குள் பெண் மீது கொடூர தாக்குதல்

பெங்களூரு ஏடிஎம் மையத்துக்குள் பெண் மீது கொடூர தாக்குதல்
Updated on
1 min read

பெங்களூருவில் ஏடிஎம் மையத்துக்குள் 44 வயது நிரம்பிய பெண் வங்கி அதிகாரியை, இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு, உல்சூர் கேட் காவல்நிலையம் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில், நேற்று காலை 7.11 மணியளவில் பெண் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அவரைப் பின் தொடர்ந்த இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தார். ஷட்டரை மூடி விட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டியுள்ளார். இதில் அந்தப் பெண் படுகாயமடைந்தார். பெண்ணிடம் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அந்த இளைஞர் தப்பிச்சென்றுள்ளார்.

ஏடிஎம் மையத்துக்குள் நடந்த சம்பவங்கள் அனைத்தும், அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக எஸ்.ஜே.பார்க் சரக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கத்தியால் தாக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் பி.ஜி.எஸ். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்று மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் அந்த ஏடிஎம் வழியாக சென்ற சிலர் வாசலில் ரத்தக் கறை இருப்பதையும், ஏடிஎம் ஷட்டர் மூடியிருப்பதையும் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே போலீசார் சம்பவ் இடத்துக்குச் சென்று காயமடைந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெயர் ஜோதி உத்தய் என்பதும் அந்தப் பெண் கார்ப்பரெசன் வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in