யூரி தாக்குதல்: பாதுகாப்பு கோளாறுகளை அடையாளம் கண்ட தேசியப் புலனாய்வு முகமை

யூரி தாக்குதல்: பாதுகாப்பு கோளாறுகளை அடையாளம் கண்ட தேசியப் புலனாய்வு முகமை
Updated on
1 min read

18 ராணுவ வீரர்களின் உயிர்களைப் பலி வாங்கிய யூரி ராணுவ முகாம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் தேசியப் புலனாய்வு முகமை நடைமுறை ரீதியிலான சில பாதுகாப்புக் கோளாறுகளை அடையாளம் கண்டுள்ளது.

இது குறித்த ஆவணமாக்கம் இறுதி நிலை எய்தும் நிலையில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சிலபல தடயங்களைக் கைப்பற்றியுள்ளது என்.ஐ.ஏ.

உயர் பாதுகாப்பு யூரி ராணுவ முகாமின் பிரிகேட் தலைமைச் செயலகத்தின் சுற்றுப்புற பகுதிகளில் சரியாக வேலி அமைக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரிலிருந்து ஹாஜி பீர் கனவாய் வழியாக செப்டம்பர் 16, 17 தேதிகளில் 4 தீவிரவாதிகள் ஊடுருவி சுக்தார் என்ற இடத்தில் தங்கியிருக்கலாம் என்று கருதும் என்.ஐ.ஏ. குழு, சுக்தார் என்ற கிராமம் ராணுவ முகாமையும் அதனுள்ளே வீரர்கள் செயல்பாட்டையும் தெளிவாகப் பார்க்க முடியக்கூடிய ஒரு பகுதியாகும் இங்கிருந்துதான் தீவிரவாதிகள் நோட்டமிட்டுள்ளனர் என்று கூறுகிறது.

ராணுவ முகாமைச் சுற்றிலும் புதர்களும் உயரமாக புற்களும் வளர்ந்து கிடப்பதால் தீவிரவாதிகள் சுலபமாக மறைந்து நகர்ந்திருக்க முடிந்துள்ளது. இங்குதான் வேலியை வெட்டி தீவிரவாதிகள் உள்ளே புகுந்துள்ளனர் என்கிறது என்.ஐ.ஏ.

வேலியருகே, ராணுவ முகாம் சுற்றுப்பரப்பில் புற்களை வெட்டியும், புதர்களை அகற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் நடைபெறவில்லை.

மேலும் சுமார் 150மீ இடைவெளியில் உள்ள இரண்டு பாதுகாப்பு முகாம்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை இருந்திருந்தால் ஊடுருவலை கண்டுபிடித்திருக்கலாம் என்று சில கோளாறுகளை தேசிய புலனாய்வு முகமை அடையாளம் கண்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயங்கரத் தாக்குதலுக்கு முன்பாக 24 மணிநேரத்தில் யூரியில் உள்ளவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பு விவரங்கள், இணையதள தரவு பிரயோக விவரங்கள் அனைத்தையும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகள் உடல்களும் தாக்குதல் நடத்தப்பட்ட ராணுவ முகாம் அருகேயுள்ள கிராம இடுகாட்டில் புதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in