சுப்ரதா ராய்க்கு மார்ச் 4 வரை போலீஸ் காவல்

சுப்ரதா ராய்க்கு மார்ச் 4 வரை போலீஸ் காவல்
Updated on
1 min read

உச்ச நீதிமன்றத்தால் பிடிவாரன்ட் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட நிலையில், லக்னோவில் கைது செய்யப்பட்ட சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய், மார்ச் 4 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.

இது தொடர்பான உத்தரவை உத்தரப் பிரதேச காவல்துறைக்கு லக்னோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை பிறப்பித்தது.

போலீஸ் காவலில் வைக்கப்படும் சுப்ரதா ராய், மார்ச் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்.

முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், சுப்ரதா ராய்க்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2 நாட்களாக தலைமறைவாக இருந்த சுப்ரதா ராய் வெள்ளிக்கிழமை முற்பகல் லக்னோ போலீசாரிடம் சரணைடந்தார். இதனையடுத்து சுப்ரதா ராய் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் லக்னோ நீதிமன்றம் தலைமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.

வர்த்தகம் பாதிக்காது:

முன்னதாக, காலையில் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுப்ரதா ராயின் மகன் சீமாந்தோ ராய், தனது தந்தை சுப்ரதா தானாகவே முன்வந்து போலீசில் சரணடைந்துள்ளார். அவரை லக்னோ போலீசார் கைது செய்துள்ளனர். சுப்ரதா ராய் கைது நடவடிக்கையால், சஹாரா குழுமத்தின் வர்த்தகம் பாதிக்காது என தெரிவித்தார்.

ராம் ஜெத்மலானி வாதம்:

இதனிடையே, நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலனி, சுப்ரதா ராய் போலீசில் சரணடைந்ததை தெரிவித்தார்.

மேலும், பிப்ரவரி 26-ஆம் தேதி சுப்ரதா ராய் மீது விதிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

தனது கோரிக்கை மனுவை விசாரிக்க நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஜெ.எஸ்.கேஹார் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று கூட வேண்டும் என தெரிவித்தார். ஆனால், சிறப்பு அமர்வு இன்று கூட வாய்ப்பில்லை என நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in