

உத்தரப் பிரதேசத்தில் 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலை யுடன் ஓய்ந்தது. இதில் 160 கோடீஸ் வரர்கள், குற்ற வழக்கில் சிக்கிய 126 பேர் போட்டியிடுகின்றனர்.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 இடங்களைக் கொண்ட சட்டப்பேர வைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 6-ம் கட்டமாக 7 மாவட்டங்களுக்குட்பட்ட 49 தொகுதியில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில வாரங்களாக நடந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்கின் அசம்கார் மக்களவை தொகுதி, சர்ச்சைக்குரிய பாஜக பிரமுகர் யோகி ஆதித்ய நாத்தின் கோரக்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகள் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்தத் தேர்தலில் 78 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் 175 சுயேச்சைகள் உட்பட 635 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 60 பேர் பெண்கள். வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை உ.பி. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தியது. அதன் விவரம்:
6-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 160 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) 35, பாஜகவின் 33, சமாஜ் வாதியின் 28, காங்கிரஸின் 6, ஆர்எல்டி கட்சியின் 8 பேர் மற்றும் சுயேச்சைகள் 23 பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் அதிக சொத்து மதிப்பில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ள ஷா ஆலம் உர்ப் குடு ஜமாலி (ரூ.118 கோடி), வினய்சங்கர் (ரூ.67 கோடி), அய்ஜாஜ் அகமது (ரூ.52 கோடி) ஆகியோர் பிஎஸ்பி கட்சியைச் சேர்ந்தவர்கள். 168 பேர் பான் எண் விவரம் தரவில்லை.
மேலும் 126 பேர் தங்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதில் 109 பேர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளன.
5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் 229 பேர். பட்டப் படிப்புக்கு மேல் படித்தவர்கள் 338 பேர். 38 பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும். 3 பேர் படிப்பறிவில்லாத வர்கள்.
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தல்
மணிப்பூர் மாநிலத்தில் 60 இடங் களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறு கிறது. இதில் 38 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல் நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
இங்கு முதல்வர் ஒக்ராம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரு கிறது. இந்த முறையும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகிறது.
அதேநேரம், முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் சமூகப் போராளி இரோம் ஷர்மிளா கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. அதேநேரம் ஐக்கிய நாகா கவுன்சிலின் கடுமையான போராட்டம் காரணமாக கடந்த 4 மாதங்களாக பொருளாதார முடக்க ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.