

ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் கசிய காரணமாக இருந்தவர் அது தொடர்பான சிடியை ஆஸ்திரேலிய அரசிடம் நாளை ஒப்படைப்பார் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்திய கப்பல் படைக்காக, பிரான்ஸின் டிசிஎன்எஸ் நிறுவனத் தின் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையில் உள்ள மசாகான் டாக் நிறுவனத்தில் ஸ்கார்பீன் ரக கப்பல் ஒன்று தயாரிக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்ற 5 கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த கப்பல்கள் குறித்த ரகசிய ஆவணங்களை ஆஸ்திரேலி யாவின், ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த ஆவணங்கள் எப்படி கசிந்தன என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இதுகுறித்து இந்தத் தகவலை வெளியிட்ட ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஆவணங்கள் கசிய காரணமாக இருந்தவரே, அது தொடர்பான சிடியை ஆஸ்திரேலிய அரசிடம் திங்கள்கிழமை ஒப்படைப்பார். அந்த நபர் அரசு அதிகாரிகளுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான்.
அவர் எந்த சட்டத்தையும் மீறவில்லை. டிசிஎன்எஸ் நிறுவ னத்திடமிருந்து நீர்முழ்கி கப்பல் வாங்க ஆஸ்திரேலியா திட்டமிட் டுள்ள நிலையில், இந்தியாவின் புதிய நீர்மூழ்கி தொடர்பான ரகசியங்களை பாதுகாக்க பிரான்ஸ் தவறி விட்டதை அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
இதன்மூலம், ரூ.3.35 லட்சம் கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியம் கசியாமல் பாதுகாத்துக் கொள்ள ஆஸ்திரேலிய அரசும் டிசிஎன்எஸ் நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் நம்பு கிறார்.
கடந்த 1970-களில் பிரான்ஸ் கப்பல் படையிலிருந்து விலகிய ஒரு அதிகாரி, பிரான்ஸ் பாதுகாப்பு நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். பின்னர் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரராக ஆகி உள்ளார்.
இவர்தான் பாரிஸ் நகரில் உள்ள டிசிஎன்எஸ் நிறுவனத்திலிருந்து 2011-ம் ஆண்டில் ஸ்கார்பீன் கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை திருடியதாகவும் வேறு ஒருவரும் இவருக்கு உடந்தையாக இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் இவர்கள் இருவரும் இந்த ஆவணங்களை தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர்.
பிரான்ஸ் கப்பல் படையின் முன்னாள் அதிகாரி தன்னுடைய புதிய வேலைக்கு வழிகாட்டியாக பயன்படுத்தவே இந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. சட்டத்தை மீறி ஏன் அவர்கள் இந்தச் செயலை செய்யத் துணிந்தார்கள் என்று தெரியவில்லை.
பின்னர் இருவரையும் அந்த நிறுவனம் பணியிலிருந்து நீக்கி உள்ளது. இதையடுத்து ஸ்கார்பீன் பற்றிய தகவலை திருப்பித் தருமாறு ஒருவர் கேட்டுள்ளார். ஆனால் அந்த தகவலின் முக்கியத்துவத்தை உணராத அந்த நிறுவனம் அதைத் தர மறுத்துள்ளது. பின்னர் அந்தத் தகவலை சிங்கப்பூரில் உள்ள தனது தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
அங்கிருந்த தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர், தனது நிறுவனத்துக்காக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஒரு ஊழியருக்கு ஸ்கார்பீன் பற்றிய ஆவணங்களை 2013-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதற்காக சர்வரில் சேமிக்கப் பட்டிருந்த இந்த தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு அதிகம். அந்தத் தகவல் எவ்வளவு காலம் சர்வரில் இருந்தது எனத் தெரிய வில்லை. மேலும் சர்வரில் இருந்த காலகட்டத்தில் வெளிநாட்டு உளவு அமைப்புகள் ஏதேனும் அதை ஹேக்கிங் செய்ததா என்றும் தெரியவில்லை.
ஆனால் மிகப்பெரிய கோப்பு என்பதால் இணையதளம் மூலம் முழுமையாக அனுப்ப முடியாததால் சிடி வடிவில் மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அந்த சிடியை தனது கம்ப்யூட்டரில் போட்டு பார்த்த அந்த அதிகாரி, அதில் இந்தியா வாங்க உள்ள ஸ்கார்பீன் பற்றிய ஆவணங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் குறியீடாக (என்கிரிப்ட்) மாற்றப்படாமல் இருந்த அந்த சிடியை குறியீடுடன் கூடிய சிடியாக மாற்றினார். பின்னர் பழைய சிடியை துண்டு துண்டாக உடைத்துவிட்டார். இதை கடந்த 2 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த அவர், சமீபத்தில் எங்களிடம் வழங்கினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.