

இளம்பெண்ணை குஜராத் போலீஸார் வேவு பார்த்த விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குஜராத் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்ய முடியாது என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு பிரதீப் சர்மாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டில் பெங்களூரைச் சேர்ந்த பெண் பொறியாளரை குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை போலீஸார் வேவு பார்த்ததாக கோப்ராபோஸ்ட், குலைல் ஆகிய இணையதள ஊடகங்கள் சில நாள்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டன.
இதற்கு ஆதாரமாக அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் சிங்கால் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களையும் அந்த இணையதளங்கள் வெளியிட்டன. அப்பெண்ணை வேவு பார்க்க மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தொலைபேசி உரையாடலில் அமித் ஷா குறிப்பிடுகிறார்.
அந்த மேலிடம் குஜராத் முதல்வர் மோடிதான் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
சஸ்பெண்ட் ஐ.ஏ.எஸ். அதிகாரி
இந்தப் பின்னணியில் குஜராத் அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் சர்மா, இளம்பெண் விவகாரம் காரணமாகவே நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன், என் மீதான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பது:
என்னுடைய இளைய சகோதரர் குஜராத்தின் மூத்த போலீஸ் அதிகாரியாக (ஐ.பி.எஸ்.) பணியாற்றுகிறார். கோத்ரா கலவரத்தில் முதல்வர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தவறான நடவடிக்கைகளை அவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
அப்போதுமுதலே என் மீது பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் எனக்கும் தெரியும். இந்தக் காரணங்களால்தான் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன் என்று மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார்.
பிரதீப் சர்மா 1984 பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. கட்ச் நிலநடுக்க நிவாரணப் பணிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 2012 ஜனவரி 6-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.