Last Updated : 20 Jan, 2016 08:50 AM

 

Published : 20 Jan 2016 08:50 AM
Last Updated : 20 Jan 2016 08:50 AM

விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு வரிச்சலுகை: பிரதமருக்கு மத்திய அமைச்சர் மேனகா கடிதம்

விதவை, ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மீது ஆலோசனைகள் வழங் கும்படி பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை உறுப்பினர் கள் அனைவருக்கும் கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்கள், தங்கள் துறைகளில் எந்தவகையான வரிகள் விதிக்கப் பட வேண்டும், என்ன சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதி வருகின்றனர். இந்தவகை யில் மத்திய அமைச்சர் மேனகா வும் பிரதமருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதினார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய மகளிர் மற்றும் குழந்தை கள் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “அமைச்சர் தனது கடிதத்தில், ஆதரவற்ற குழந்தைகள் தத்து எடுக்கப்படு வதை ஊக்குவிக்கும் வகையில், இக்குழந்தைகளை சட்டப்பூர்வ மாக தத்து எடுப்பவர்களுக்கு வரு மான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது தவிர மைனர் குழந்தை களுடன் வாழும் விதவைகள், கைவிடப்பட்ட மற்றும் ஆதர வற்ற பெண்களுக்கும் இச் சலுகை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். பெண்களுக்கு வழக்கமான வரிச்சலுகையுடன் இது கூடுதல் சலுகையாக இருக்க வேண்டும் என்பது அமைச்சரின் விருப்பம்” என்றார்.

இதே கடிதத்தில் “பெண்களின் கல்விக்காக தனி ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும், அரசுப் பணி களில் சேர விதவைகளுக்கு வயது வரம்பு கூடாது, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குழந் தைகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்” எனவும் மேனகா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் தற்கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மேனகா விவசாயிகளின் குழந்தை கள் கல்வி கற்கவும் சுயதொழில் தொடங்கவும் நிவாரணத்தொகை உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பட்ஜெட் நேரம் என்றில்லாமல் மேனகா தான் அமைச்சரானது முதலே பிரதமருக்கு ஆலோசனை கடிதங்கள் எழுதி வருகிறார். இவற்றில் பல ஆலோசனைகள் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன் மேனகா, ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து பராமரிக்கும் பெண் களுக்கும் 4 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மற்றப் பெண்களுக்கு கிடைக் கும் மகப்பேறு விடுப்பின் கணக்கில் இந்த 180 நாட்கள் விடுப்பை மத்திய அரசு அமல் படுத்தி உள்ளது. ஆனால் இவ்வாறு தத்து எடுக்கப்படும் குழந்தையின் வயது ஒன்றுக்கும் குறைவாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பில் பொதுமக்களிடமும் பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார். மத்திய அரசின் www.mygov.in என்ற இணைய தளத்தில் நேற்று மதியம் வரை 3487 ஆலோசனைகள் பதிவாகி உள்ளன.

பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளில் பட்ஜெட் ஆலோசனைகள் பெறும்படி பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x