

“வெயிட்டிங் லிஸ்ட்” பயணிகளுக்கு அவர்களது டிக்கெட் உறுதியாகும்போது, அதுகுறித்த ‘எஸ்எம்எஸ்’ தானியங்கி முறையில் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
ரயில்வே இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்த கார்கே இதுகுறித்து மேலும் பேசியது:
கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே வாடிக்கையாளர் சேவையில் தகவல் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் தொடரும். முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவது பரவலாக்கப்படும். மேலும் மொபைல் போன் மூலம் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பயணிகள் அறியும் வகையில் ரயில் பெட்டிகளில் கருவிகள் பொருத்தப்படும்.
தேர்வு செய்யப்பட்ட சில வழித்தடங்களில் ஆன்லைன் மூலம் உணவுக்கு ஆர்டர் செய்யவும், சரக்குகளை அனுப்புவோருக்கு ரயில்வே ரசீதுகளை எலெக்ட்ரானிக் முறையில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு கோரிக்கைகள் மற்றும் அதன் மீதான தீர்வு நடவடிக்கைகள் முற்றிலும் கணினிமயமாக்கப்படும்” என்றார் கார்கே.