

ஆதார் அட்டை பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.எஸ்.ஏ.) முன்னாள் ஊழியர் ஸ்னோடென் வெளியிட்டுள்ள ஆவணங்களின்படி அந்த நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலமாகவே பெரும்பாலான ஆவணங்களை என்.எஸ்.ஏ. திருடியுள்ளது.
இது தெரிந்திருந்தும் அமெரிக்க நிறுவனத்துடன் ஆதார் அட்டை ஆணையம் (யுஐடிஏஐ) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமெரிக்க நிறுவனத்துடன் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் பட்டியலில் சி.ஐ.ஏ.வும் இடம்பெற்றுள்ளது.
இதனால் இந்திய மக்களின் ரகசியங்கள் அமெரிக்காவின் கைகளில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
ஆதார் அட்டைப் பணி சட்டப்பூர்வமாக நடைபெறவில்லை. அரசின் சலுகைகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று அறிவிப்பதும் சட்டவிரோதம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தனியாக சட்டம் இயற்ற வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.