

ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்கள் பாஜகவிற்கு கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
கட்சிக் கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி கூறியதாவது: “நரேந்திர மோடியை பாராட்டி இப்போதே சிலர் கோஷமிடத் தொடங்கிவிட்டனர். ஆனால், பாஜக ஆட்சிக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.பி.க்கள் அவர்களுக்கு கிடைப்பது சந்தேகம்தான். அவர்கள் இப்போது கூறும் தேர்தல் கணக்குகள் அனைத்தும் நாட்கள் செல்லச்செல்ல தேய்ந்துபோய்விடும் என்பது உறுதி.
மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் பாஜகவிற்கு போதிய செல்வாக்கு இல்லை. பிரிவினைவாதத்தை வலியுறுத்தும் அரசியலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மலைப்பகுதியில் (டார்ஜிலிங்) ஒரு தொகுதியில் கிடைக்கும் வெற்றிக்காக சிலர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க முயற்சிக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினால் நிலையான ஆட்சியைத் தர முடியாது. கூட்டாட்சியை விரும்பும் கட்சிகள் அடங்கிய முன்னணியால்தான் ஆட்சியில் அமர முடியும். தேர்தலுக்கு பிறகு 3-வது பெரிய கட்சியாக திரிணமூல் காங்கிரஸ் உருவெடுக்கும்.
காங்கிரஸ் ஓர் ஊழல் கட்சி, பாஜக ஓர் மதவாதக் கட்சி. இடதுசாரிக் கட்சிகள் அழிவு அரசியலில் ஈடுபடுகின்றனர். மூன்றாவது அணி ஓர் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகும். அதனால், நிலையான ஆட்சியை தர முடியாது.
மத்தியில் மாற்றம் தேவை. அங்கு மக்களின் அரசு அமர வேண்டும். காஸ், பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயர்த்தும் அரசு நமக்குத் தேவையில்லை.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒன்றும் பணக்காரக் கட்சியல்ல. மக்களவைத் தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை ரூ. 70 லட்சமாக தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது. மிகப்பெரிய கட்சிகளும், பணக்காரக் கட்சிகளும் செலவு செய்யும் தொகைக்கு இணையாக எங்களால் பணம் செலவு செய்ய முடியாது.
இப்போது 3 மாநிலங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ளது. தேர்தலுக்குப் பிறகு நான்கு மாநிலங்களில் நமது செல்வாக்கு இருக்கும். விரைவில் தேசியக் கட்சியாக உருவெடுப்போம்” என்றார்.