Published : 28 Apr 2017 04:04 PM
Last Updated : 28 Apr 2017 04:04 PM

அமைதி திரும்ப வேண்டுமெனில் காஷ்மீர் மாணவர்கள் கல்லெறிவதை நிறுத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமெனில் மாணவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்துவதை விடுத்து கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் திரும்பி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, காஷ்மீ தெருக்களில் பெல்லட் பிரயோகமும் கல்லெறித் தாக்குதலும் நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறும்போது, கல்விதான் அங்கு நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தெருக்களில் பொங்கும் கோபத்திற்கு தீர்வளிக்க முடியும் என்றார்.

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் எதிர்வாதம் செய்த போது, பாதுகாப்புப் படையினர் பள்ளிகளிலும் கல்லூரி வளாகங்களிலும் புகுந்து மாணவர்களை அடிக்கின்றனர் என்றனர், “மாணவர்களை அடித்தால் அவர்கள் தெருவில் இறங்கி போராடவே செய்வார்கள். கல்லெறி தாக்குதல் என்பது ஒரு எதிர்வினை. காஷ்மீர் மக்களிடம் மத்திய அரசு பேசத் தவறிவிட்டது. தடையற்ற, நிபந்தனையற்ற உரையாடலை காஷ்மீர் மக்கள் எதிர்நோக்குகின்றனர்” என்றது.

இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் மனுதாரர் பார் அசோசியேஷன் முதலில் சம்பந்தப்பட்டவர்கள் வன்முறையக் கைவிடுவதாக கோர்ட்டில் உறுதியளிக்க வேண்டும் என்றது.

மே 9-ம் தேதி வாக்கில் இந்த உறுதி மொழிகள் பதிவு செய்யப்பட்டால், பாதுகாப்புப் படையினரை 15 நாட்களுக்காவது விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் அறிவுறுத்த முடியும், இருதரப்பினருமே முக்கிய பிரச்சினைகளை பேச வேண்டும். இரு கைகளையும் தட்டினால்தான் ஓசை, என்று நீதிபதி கவுல் தெரிவித்தார்.

“தொடர்ந்து கல்லெறி தாக்குதல் செய்வது, பள்ளிகளை மூடுவது என்றால் பேச்சு வார்த்தை எப்படி சாத்தியம்? முதலில் பேசுங்கள். பேச்சுவார்த்தைகள் அரசியல் சாசன சட்டக்கத்திற்குள் இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி வாதிடும் போது, “பிரிவினைவாதத் தலைவர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று கூறி மனுதாரர்கள் சமர்ப்பித்த வாக்குமூலத்தை வாசித்தார், அதில் காஷ்மீர் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, “எங்கள் இதயம் காஷ்மீர் மக்களுக்காகவே துடிக்கிறது. ஒட்டு மொத்த மாநிலமும் அரச பயங்கரவாதத்தில் சிக்கியுள்ளது என்று அவர்கள் கூறுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடானது என்று அவர்களால் கூற முடியுமா?

பிரதமரையும், முதல்வரையும் சந்திப்பதிலிருந்து இவர்களை யார் தடை செய்தது? பேச்சுவார்த்தைகளை அரசியல் தலைவர்கள்தான் முன்னெடுக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தில் அல்ல” என்றார் ரோத்கி.

வாதப்பிரதிவாதங்களின் ஒரு கட்டத்தில் மனுதாரர்களான பார் அசோசியேஷன், தங்களுக்கு பிரிவினைவாத தலைவர்களிடம் செல்வாக்கில்லை, எனவே கோர்ட்டின் பார்வைகளை தங்களால் அவர்களிடம் கொண்டு செல்ல முடியாது என்று கூறிய போது, நீதிபதி சந்திராசூட், பார் அசோசியேஷன் உரையாடலில் பங்கு கொள்பவராக இங்கு வந்த பிறகு இதிலிருந்து பின் வாங்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x