Last Updated : 24 Dec, 2013 12:00 AM

 

Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

கெஜ்ரிவால்: பொறியியல் பட்டதாரியின் நாற்காலிப் பயணம்

ஹரியாணா மாநிலம் ஹிசார் கிராமத்தில் ஆகஸ்ட் 16, 1968 ஆம் ஆண்டு பிறந்தவர், அர்விந்த் கேஜ்ரிவால். கரக்பூர் ஐஐடியில் இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார்.

பணி செய்து கொண்டே மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வை எழுதி, வருவாய்த்துறை அதிகாரியாக (ஐஆர்எஸ்)1995 –ல் தேர்வு பெற்றார். தன்னுடன் படித்து ஐ.ஆர்.எஸ் தேர்ச்சி பெற்ற சுனிதாவைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் கோசாம்பி பகுதியில் வசிக்கிறார்.

தெரசாவுடன் சந்திப்பு

குடிமைப்பணி தேர்வுக்காக கொல்கத்தாவில் சில மாதங்கள் தங்கிப் படித்த போது, அன்னை தெரசாவைச் சந்தித்தார். அப்போது அன்னை தெரசாவால் பொதுநலப் பணிகளுக்கு ஈர்க்கப்பட்டார்.

காஜியாபாத்தில் வருவாய்த் துறை இணை ஆணையராகப் பணியாற்றியவரின் கவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பக்கம் திரும்பியது. இதன் முக்கியத்துவம் அறிந்து அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்காக பாடுபட் டவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

ராமன் மகசேசே

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய கூறுகளையும் வகுத்ததற்கும், பல்வேறு சிறந்த பணிகளை பாராட்டியும் கேஜ்ரிவாலுக்கு, ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ‘ராமன் மகசேசே’ விருது 2006 ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. அந்த விருதில் கிடைத்த தொகையை பொதுமக்களுக்கான தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கி விட்டார்.

தனது அரசு பணியை ராஜினாமா செய்தவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊழல்களை வெளிக் கொண்டு வந்தார். இந்தவகையில் டெல்லியில் போலி ரேஷன் கார்டுகள் இருந்ததை 2008-ல் தகவல் அறியும் சட்டம் மூலமாக வெளிக்கொண்டு வந்த பின் புகழ் பெற்றார்.

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவிற்கு சட்டத்திற்கு புறம்பாக மிகக் குறைந்த விலையில் அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விஷயமும் கேஜ்ரிவால் குழுதான் வெளிப்படுத்தியது.

ஹசாரேவுடன் கைகோர்ப்பு

கடந்த 2011-ல் லோக்பால் மசோதாவிற்காக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்டார் கேஜ்ரிவால். அப்போது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் என நட்பு வட்டாரம் விரிந்தது. தன் தீவிர செயல்பாட்டால் சக நண்பர்களை விட புகழ் பெற்றார்.

இந்த சந்தர்ப்பங்களில் அவர் அரசியல் கட்சிகள் மீது வைத்த கடுமையான விமர்சனத்தை தாங்க முடியாத மத்திய அமைச்சர் கபில்சிபல், ’உங்களால் முடிந்தால் அரசியலில் குதித்து, சொன்னதைச் செய்து காட்ட வேண்டும்’ எனக் கேஜ்ரிவாலுக்கு சவால் விட்டார்.

ஆம் ஆத்மி உதயம்

கபில்சிபலின் சவாலை ஏற்றுக் கொள்ளும் வகையில் கேஜ்ரிவால், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2012- ல் ஆம் ஆத்மி (பாமர மனிதன்)’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். காந்தியை போல் கேஜ்ரிவாலும் ’பனியா’ எனும் வியாபாரிகள் சமூகத்தை சேர்ந்தவர்.

அரசியல் கட்சியைத் தொடங்கியதால் அண்ணா ஹசாரேவின் அதிருப்திக்கு ஆளானார். ஹசாரேவைப் பிரிந்த போதும் கேஜ்ரிவால் தொடர் போராட்டங்களை நடத்தினார். கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை விமர்சித்த ஹசாரேவே பின்னாளில் அவரைப் பாராட்ட வேண்டிய சூழலை உருவாக்கினார்.

காலத்தின் கட்டளை

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கி எறிந்த ஆம் ஆத்மி 28 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதித்தது. பாஜக 32 இடங்களைப் பிடித்தது; யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

“தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் யாருக்கும் ஆதரவு தர மாட்டோம், யாரிடமும் ஆதரவு கோர மாட்டோம்” என தேர்தலுக்கு முன்பு வீராவேசமாகப் பேசிய கேஜ்ரிவால், பின்னர் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் தருணமும் வந்தது.

ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜக அனுமதி கோரினால் அதைத் தடுக்க மாட்டோம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.

பின்னர் பாஜக முன்வராத போது, ஆம் ஆத்மிக்கு ஆட்சிப் பொறுப்பேற்க வாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரியவந்தபோது, மக்களின் கருத்தைக் கேட்டவர், தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்க முடிவு செய்திருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, கேஜ்ரிவாலைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்த காங்கிரஸ் தற்போது அவரை ஆட்சியில் அமர்த்த முன்வந்திருப்பது காலத்தின் கட்டளை.

குடும்பப் பின்னணி:

கேஜ்ரிவாலின் தந்தை கோவிந்த ராம் கேஜ்ரிவால், தாய் கீதா தேவி. இவர்கள் சைவ உணவுகளை மட்டும் உட்கொள்பவர்கள். கேஜ்ரிவாலின் பெற்றோர் சிறந்த கல்வியறிவு பெற்றவர்கள்; கோவிந்த ராம் கேஜ்ரிவால் எலக்டிரிகல் என்ஜினீரிங் பட்டம் பெற்று, அரசு அதிகாரியாகப் பணிபுரிந்தவர். நல்ல செல்வாக்கான குடும்பம் இவர்களுடையது.

தந்தை அரசுப் பணியில் இருந்ததால் அடிக்கடி பணி மாற்றம் காரணமாக, டெல்லியைச் சுற்றியுள்ள பள்ளிகளில் விடுதிகளில் தங்கி படித்தவருக்கு குடும்ப சூழல் வளர்ப்பு குறைவுதான். அவருக்கு இருந்த வசதியின் காரணமாக சம்பாதிக்கும் ஆசை குறைவாகவே இருந்தது.

ஆனால், கடைசியாக பணியை ராஜினமா செய்த செய்த போது, ஏற்பட்ட பண நெருக்கடியை நண்பர்களிடம் கடன் வாங்கி சமாளித்திருக்கிறார். வீட்டின் மூத்தவரான கேஜ்ரிவாலுக்கு ஒரு தங்கை மற்றும் தம்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x