

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு மெளனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங் டெல்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
வெளியுறவுக் கொள்கை, சர்வதேச பொறுப்பு, தேசிய நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும். உள்நாட்டு நலன்களை மைய மாக வைத்தே வெளிநாட்டு கொள்கைகள் வகுக்கப் படுகின்றன. முடிவெடுக்கும்போது உள்நாட்டு நலன்களும் கருத் தில் கொள்ளப்படும். இந்த விவ காரத்தில் மாநாடு தேதி நெருங்கி வரும்போது உரிய முடிவெடுக் கப்படும்.
சட்டப்படி நடவடிக்கை
தூத்துக்குடியில் பிடிபட்ட கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்தது. ஆனால் அந்தக் கப்பலில் மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோன் தேசியக் கொடி பறந்தது. உரிய அனுமதி இன்றி இந்திய கடல் எல்லைக்குள் கப்பல் நுழைந்துள்ளது. அதில் ஏராள மான ஆயுதங்களும் இருந்தன. இதன் காரணமாகவே ஆயுதம், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நியாயமானதே. இதுகுறித்த தகவல் அமெரிக்க தூதரகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.