

ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் இல்லாத மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மத்திய அரசு சார்பில் ‘ஆயுஷ்’ கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும் என, மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் ஆயுர்வேதா, யோகா, ஹோமியோபதி மருத் துவத் துறை இணையமைச்சர் பாத் யசோ நாயக் மக்களவையில் இதுகுறித்து நேற்று தெரிவித்ததாவது:
ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு, அரசுத் துறை கல்வி நிறுவனங்கள் இல்லாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ், ‘ஆயுஷ் கல்வி நிறுவனங்கள்’ அமைக்கப்படும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட வருடாந்திர செயல் திட்டத்தின் அடிப்படையில், மத்திய அரசு சார்பில் இந்நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
இதுதவிர, ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக நலவாழ்வு மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள் போன்றவற்றில் ‘ஆயுஷ்’ பிரிவு செயல்படும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரத்தியேக மாநில அரசு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை மேம்படுத் துவது, 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனைகள் அமைப்பது உள்ளிட்ட இதர முயற்சிகளும், தேசிய ஆயுஷ் திட்டத்தின் மூலம் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.