

இந்தியாவில் இந்தாண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே.ரமேஷ் கூறும் போது, ‘‘கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை பருவநிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பசிபிக் பெருங்கடல் மேற்பரப் பில் இடம்பெறும் வெப்ப நிலை (எல் நினோ) கடந்த சில வாரங்களாக குறைந்திருப்பதால், இந்தியாவில் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்யும். இதன் மூலம் நாட்டின் வேளாண் உற்பத்தி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவின் வருடாந்திர மழையளவில் பருவமழை 70 சதவீதம் பங்கு வகிக்கிறது. குறிப்பாக பருவமழையை நம்பி நெல், கரும்பு, சோளம், பருத்தி, சோயாபீன்ஸ் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை என்றால் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கும்.
இந்நிலையில், கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை நாட்டில் பெய்த மழை அளவை இந்திய வானிலை மையம் ஆய்வு செய்துள்ளது. அதன்படி 89 செ.மீ. அளவுக்குதான் சராசரியாக மழை பதிவாகி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு எல் நினோ வெப்ப நிலை குறைந்து சாதகமான பருவநிலை ஏற்பட்டுள்ளதால், 96 சதவீத மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.