பெங்களூரு பாதாள சாக்கடையில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்

பெங்களூரு பாதாள சாக்கடையில் இறங்கியபோது விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்
Updated on
1 min read

பெங்களூருவில் பாதாள சாக்கடையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

பெங்களூரு சி.வி.ராமன் நகரின் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் நேற்று முன்தினம் அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது. நேற்று முன் தினம் ந‌ள்ளிரவு 12.30 மணியளவில் துப்புரவு பணியாளர்கள் எரைய்யா (35), ஆஞ்சநேயா ரெட்டி (34) ஆகியோர் ஓட்டுநர் தாவதி நாயுடு (40) உடன் அங்கு சென்று பணியைத் தொடங்கினர்.

முதலில் எரைய்யா பாதாள சாக்கடை குழியில் இறங்கி, துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் எரைய்யா மேலே வராததால் ஆஞ்சநேயா ரெட்டி உள்ளே இறங்கியுள்ளார். அடுத்த சில நிமிட‌ங்களில் விஷ வாயு தாக்கியதால், கூச்சல் போட்டவாறு மயங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் தாவதி நாயுடு இருவரையும் காப்பாற்ற பாதாள சாக்கடை குழியில் இறங்கியுள்ளார். மூன்று பேரையும் விஷ வாயு தாக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதாள சாக்கடையில் உயிருக்கு போராடியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் பாதாள சாக்கடையில் இறந்து கிடந்த‌ எரைய்யாவின் உடலை மீட்டனர். மயங்கிய நிலையில் கிடந்த ஆஞ்சநேயா ரெட்டியும், தாவதி நாயுடுவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பையப்பனஹள்ளி போலீஸார் விசாரித்து, பெங்களூரு மாநகராட்சியின் துப்பரவு பணி ஒப்பந்ததாரர் மீது பணியில் அலட்சியம் காட்டியதாக இந்திய தண்டனை சட்டம் 304 (எ)-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் பாதாள சாக்கடையில் இறங்கியதாலே உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.மூன்று தொழிலாளர்கள் பலியானதைக் கண்டித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தலைமையில் பெங்களூருவில் துப்புரவு பணியாளர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு மாநகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in