

காங்கிரஸ் கட்சி நம்பத்தகுந்தது அல்ல. தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அக்கட்சி தோல்வியடைந்துள்ளது. அக்கட்சியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஷாதோலில் உள்ள பான்கங்கா மைதானத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:
காங்கிரஸ் கட்சி மீது மக்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர். அக்கட்சி டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடையும். காங்கிரஸ் கட்சி நம்பத் தகுந்தது அல்ல. அக்கட்சி தனது வாக்குறுzதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது.
அக்கட்சியை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். நாடு சுந்திரமடைந்த பின்பு, காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சரவையை அக்கட்சி ஏற்படுத்தவில்லை. வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி யில்தான் பழங்குடியினருக்கென தனி அமைச்சகம் தொடங்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தியுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன்” என்றார் நரேந்திர மோடி.