

இந்திய, இலங்கை மீனவர்கள் சர்வதேச எல்லை கோட்டைத் தாண்டக் கூடாது என்று இலங்கை மீனவர் சங்கத் தலைவர் ஆல்பர்ட் ஜஸ்டின் சோய்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: இந்திய மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பதால் பிரச்சினை எழுவது இல்லை. ஆனால் அவர்கள் இலங்கையின் முல்லைத் தீவு அருகே மீன் பிடிக்கிறார்கள். இது இந்திய எல்லையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதனால்தான் பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய மீனவர்களின் மீன்பிடி முறைகளும் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
மீன்பிடித் தொழில் தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்களும் சர்வதேச எல்லைக்கோட்டைத் தாண்டக்கூடாது என்றார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் பிராந்தியத்தைச் சேர்ந்த நாகந்தி பொன்னம்பலம் கூறியதாவது:
இந்திய மீனவர்கள் விசைப் படகுகளைப் பயன்படுத்து கின்றனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தியாவுக்கு மட்டு மல்ல, இலங்கை, கிழக்கு ஆசிய பிராந்தியம் முழுவதும் பாதிக்கப் படும் என்றார். இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டம் சென்னையில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது இந்தப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. - பி.டி.ஐ.