

‘முன்னாள் எம்.பி.க்களுக்கு சலுகைகளை நிறுத்த வேண்டும்’ எனக்கோரி அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த லோக் பிரகாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மக்களவை மற்றும் மாநிலங்களவை யின் செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதுகுறித்து மாநிலங்களவை யில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பிய போது, ‘‘முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை முடிவு செய்யும் அதிகாரம் நாடாளு மன்றத்துக்குதான் உள்ளது’’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். இந்நிலையில், மக்களவையில் இந்தப் பிரச்சினையைக் பூஜ்ய நேரத்தின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பினர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகதா ராய் பேசும்போது, ‘‘உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி கருத்துகள் தெரிவிக்கிறது. முன்னாள் நீதிபதிகளுக்கு ஏன் ஓய்வூதியம் தருகின்றனர் என்று நாடாளுமன்றம் கேள்வி எழுப்புவ தில்லை. இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்தகுமார் பதில் அளிக்கையில், ‘‘சட்டத்தில் கூறியுள்ளபடியே எம்.பி.க்களுக்கு ஓய்வூதியம், சலுகைகள் வழங் கப்படுகின்றன. அதை நாடாளு மன்றம் முடிவு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. இது நாடாளுமன்ற அதிகார வரம்புக் குட்பட்டது ’’ என்றார்.