

ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உயர்ரக பாசுமதி அரிசியை நடுக்கடலில் துபாய்க்கு திசை திருப்பியதில் நடந்த ரூ.1,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்குமாறு அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த 25 பெரும் ஏற்றுமதியாளர்கள் கடந்த 2014-15 காலக்கட்டத்தில் ஈரானுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உயர் ரக பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்தனர். இந்த அரிசி குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு அனுப்பி வைப்பதற்கான ஆவணங்கள், துறைமுக அதிகாரி களிடம் முறையாக காண்பிக்கப் பட்டு, அதற்கான ரசீதுகளும் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து 2 லட்சம் மெட்ரிக் டன் உயர் ரக பாசுமதி அரிசியுடன் அந்த கப்பல் புறப்பட்டது. ஆனால் அரிசி மட்டும் ஈரானுக்கு செல்லவில்லை. நடுக் கடலில் துபாய் சென்ற கப்பலில் அரிசி மூட்டைகள் மாற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை வருவாய் துறை உளவு இயக்குநரகம் கண்டுபிடித்து அந்த தகவல்களை கறுப்பு பண வழக்கு களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் பகிர்ந்து கொண்டது.
அதன் அடிப்படையில் இந்த ஊழல் விவகாரம் குறித்து விசாரிக் கும்படி அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ளது.
நடுக்கடலில் அரிசி மூட்டைகள் வேறு கப்பலுக்கு மாற்றப்பட்டு அவை துபாய் சென்றடைந்த போதிலும், அரிசியை பெற்றுக் கொண்டதாக ஈரான் வியாபாரிகளிடம் இருந்து ரசீதுகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தான் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அரிசியை ஏற்றுமதி செய்த 25 பெரும் ஏற்றுமதியாளர்களை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.