

எதிர்ப்பு, வன்முறைகள் மற்றும் ஊரடங்கால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவத்தின் வழக்கமான செயல்பாடுகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் தொடர்ந்துவரும் அமைதியின்மையால் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பது, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட ராணுவத்தின் வழக்கமான செயல்பாடுகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தெற்கு காஷ்மீரீன் பெரும்பான்மையான பகுதிகளில் காவல்துறையினர் தங்கள் தினசரி செயல்பாடுகளில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை மீதான இடையூறுகள் மற்றும் போராட்டங்களால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு தலைதூக்கியுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேல் ஏற்பட்டுள்ள கோபமே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பள்ளத்தாக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராணுவ ஜெனரல் தல்பீர் சிங் ஸ்ரீநகரில் நேற்று (செவ்வாய் கிழமை) ஆய்வு நடத்தியுள்ளார்.
உள்ளூர் மக்களிடம் இருந்து ஜம்மு & காஷ்மீர் காவல்துறை புலனாய்வு விவரங்களை சேகரிக்கும். அவர்களிடம் இருந்து ராணுவம் அவற்றைப் பெற்று சரிபார்க்கும். ஆனால் தொடர்ந்த அமைதியின்மையால், ராணுவத்தில் புலனாய்வு சேகரிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட வழக்கமான செயல்பாடுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் ஜூலை 8-ம் தேதியன்று இஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் பலியாகினர். அதைத் தொடர்ந்து கலவரத்தைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்ப காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படைக்கு உதவும்படி ராணுவத்திடம் கூறப்பட்டது.
அதிகரிக்கும் ஊடுருவல்கள்
இதுகுறித்துப் பேசிய காவல்துறை மூத்த அதிகாரி, ''காஷ்மீரின் தற்போதைய நிலை ஊடுருவல்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற அச்சத்தை அளிக்கிறது. பள்ளத்தாக்கில் ஏற்கெனவே பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் ஒன்றுகூடவும், சதித்திட்டங்கள் தீட்டவும் இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். கடந்த ஆண்டைக் காட்டிலும் இம்முறை ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் சமீப காலங்களில் ஊடுருவலின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. ஆனால் இப்போதைய நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. வன்முறைகள் குறையத் தொடங்கினால் மட்டுமே இன்னும் சில மாதங்களில் ராணுவத்தால் முழுமையாக அவர்களின் பணிக்குத் திரும்ப முடியும்'' என்று கூறியுள்ளார்.