அகிலேஷுக்கு நிதிஷ், அம்பேத்கர் பேரன் ஆதரவு

அகிலேஷுக்கு நிதிஷ், அம்பேத்கர் பேரன் ஆதரவு
Updated on
2 min read

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் ஆதரவளித்துள்ளார். மேலும் உ.பி. முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷி, அம்பேத்கரின் கொள்ளு பேரன் ராஜ் ரத்தன் அம்பேத்கரும் ஆதரவளித்துள்ளனர்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணிக்கு லாலுவின் கட்சி ஆதரவு தெரி வித்தது. ஆனால் நிதிஷ்குமார் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பினார். இதற்காக அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியுடன் இணைந்து பிரச்சாரமும் செய்து வந்தார். ஆனால் அஜித் சிங் தனது மகன் ஜெயந்த் சவுத்ரியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தக் கோரினார். மேலும் உ.பி.யின் சிறிய கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால் போட்டியில் இருந்து நிதிஷ் விலகிக் கொண்டார். இந்நிலையில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அகிலேஷை ஆதரிப்பதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் சுரேஷ் நிரஞ்சன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மதநல்லிணக்க ஆதரவு வாக்குகள் பிரிந்து விடாமல் தடுப்பதற்காக எங்கள் கட்சி இந்த முடிவு எடுத்துள்ளது. சமாஜ்வாதி - காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினால் அவர்களின் வேட்பாளர்களுக்காக நிதிஷ்ஜி பிரச்சாரம் செய்வார்” என்றார்.

இதற்கிடையே, உ.பி. முஸ்லிம் களின் நன்மதிப்பை பெற்ற முன்னாள் ஆளுநர் அஜீஸ் குரேஷியும் சமாஜ்வாதி - காங் கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக் கும்படி முஸ்லிம்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் மதநல்லிணக்கப் பாரம்பரியம் மற்றும் கலாச்சார சூழலை பாஜக மாற்ற முயல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.ஆர்.அம்பேத்கரின் கொள்ளு பேரன் ராஜ் ரத்தன் அசோக் அம்பேத்கரும் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார்.

இந்திய புத்திஸம் அமைப்பின் செயல் தலைவரான ராஜ் ரத்தன் இதுகுறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலித் சமூகத்திற்கு நீண்டகால இழப்பை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஏற்படுத்த முயற்சிக்கிறார். தேர்தலுக்குப் பிறகு அவர் பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. பாபா சாஹேப் அம்பேத்கர் அமைத்த இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை தேவை. உ.பி. யில் கிடைக்கும் வெற்றியால் பாஜகவுக்கு இந்தப் பெரும் பான்மை கிடைக்காமல் தலித்துகள் தடுத்து நிறுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11-ல் 73 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலில் ஒரு குறிப் பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு ஆதரவான அலை அடிக்கவில்லை எனக் கருதப்படுகிறது. இங்கு 64.22 சதவீத வாக்குள் பதிவானது. இதில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். எனவே, வரும் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் 67 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட தேர்தலிலும் கடும் போட்டி நிலவுகிறது. இதே நாளில் உத்தரகாண்ட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in