Published : 01 Oct 2013 12:33 PM
Last Updated : 01 Oct 2013 12:33 PM

கால்நடைத் தீவன ஊழலும், வழக்கின் போக்கும்

பிகாரில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது, விவசாயிகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கால்நடைத்துறை துணை ஆணையர் அமித் ஹாரே 1996 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கால்நடைத்துறை அலுவலகங்களில் சோதனை நடத்தி, போலியான நிறுவனங்களின் பெயரில் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு நிதி முறைகேடு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிகிறார்.

மார்ச் 11, 1996: கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்கிறது.

மார்ச் 27, 1996: ரூ. 37.7 கோடி முறைகேடு நடைபெற்ற சாய் பாஸா கருவூல வழக்கை சிபிஐ பதிவு செய்கிறது.

ஜூன் 23, 1997: குற்றச்சாட்டைப் பதிவு செய்த சிபிஐ, லாலு பிரசாத் மீது குற்றம்சாட்டுகிறது.

ஜூலை 31 1997: முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த லாலு, தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வர் பதவியில் அமர்த்திய பின்னர், பாட்னா நீதிமன்றத்தில் சரணடைந்தார்

அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

ஏப்ரல் 5, 2000: சிறப்பு நீதிமன்றத்தில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பிகாரில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர்(15 நவம்பர், 2000), பாட்னா உயர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க முடியுமா என்ற பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக 2000 டிசம்பர் முதல் 2001 டிசம்பர் வரை வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.

அக்டோபர் 5, 2001: ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வழக்கை மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 2002: ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குகிறது.

ஆகஸ்ட் 13, 2013: சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என உத்தரவிடும்படி லாலு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

செப்டம்பர் 17, 2013: சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

செப்டம்பர் 30, 2013: இவ்வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா உள்பட 45 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் சிங் தீர்ப்பளித்தார்.

இது ஆரம்பமே!

நாட்டை உலுக்கிய ஊழல் வழக்குகளில் இதுவும் ஒன்று. ரூ. 900 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் மொத்தம் 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில்,

53 வழக்குகள் ராஞ்சி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. இவற்றில் 45 வழக்குகள் முடிந்துள்ளன.

முன்னதாக முடிவடைந்த 44 வழக்குகளில் பல்வேறு அதிகாரிகள், கால்நடைத் தீவன விநியோகஸ்தர்கள் என நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லாலு பிரசாத் மீது மட்டும் 6 வழக்குகள் உள்ளன. அவற்றில் ஒரு வழக்கில் மட்டும்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 5 வழக்குகளை லாலு எதிர்கொண்டாக வேண்டும்.

* இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் 135 நாள்கள் சிறையில் இருந்துள்ளார்.

மேல்முறையீடு செய்வோம்

லாலு பிரசாத்தின் மகன்களுள் ஒருவரான தேஜஸ்வி, வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் எனக் கூறியுள்ளார்.

பாஜக, ஐ.ஜனதா தளம் வரவேற்பு

இத்தீர்ப்பினை பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் வரவேற்றுள்ளன. ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

ஊழலை வெளிப்படுத்திய அமித் கரே

கால்நடைத் தீவன ஊழல் வழக்கை அம்பலப்படுத்திய அமித் கரே, இத்தீர்ப்பு குறித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மனித வளத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள அமித் கரே, 1985 ஆம் ஆண்டு குழுவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் பிகார் கால்நடைத்துறை துணை ஆணையராக இருந்த போது, கால்நடைத்துறை அலுவலகங்களில் சோதனைகளை நடத்தி, போலி ஆவணங்கள் மூலம் நிதி முறைகேடு செய்யப்பட்டதை அம்பலப்படுத்தினார்.

தீர்ப்பு குறித்து அமித் கரே கூறியதாவது: நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு அரசு அதிகாரி என்ன செய்வாரோ அதைத்தான் நானும் செய்தேன். நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின் வழங்கப்பட்ட இத்தீர்ப்பை நான் பாராட்டுகிறேன். அரசு அதிகாரியாக எல்லா நிலைப் பதவிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x