

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உயிர்த் தியாகம் செய்யக் கூட தயாராக இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
2001-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோரை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் பி.சி.கோஷ், நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து உமா பாரதி கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எந்த சதியும் கிடையாது. எல்லாம் வெளிப்படையாக உள்ளது. நான் பெருமையுடனும் நம்பிக்கையுடனுமே ராமர் கோவில் பிரச்சாரத்தில் பங்கேற்றேன். ராமர் கோவில் கட்டப்பட்டே தீரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் கட்டப்படுவதற்காக என் உயிரையும் அளிப்பேன்" என்றார்.