

பழங்குடி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு பழிதீர்க்கவே சுக்மாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தந்த் காரண்ய சிறப்பு மண்டலக் குழு என்ற மாவோயிஸ்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 50 நாட்களில் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் நடந்த இரு தாக்குதல்களில் 37 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு தாக்குதல்களுக்குமே இந்த அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தந்த் காரண்ய சிறப்பு மண்டலக் குழுவின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட ஒலிப்பேழையில், "இந்தத் தாக்குதல்கள் பழிதீர்ப்பதற்காகவும் மக்கள் விரோத கொள்கைகளை தோற்கடிப்பதற்காக சுக்மா தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தக் தாக்குதல்களை பழங்குடியினப் பெண்கள், சிறுமிகள் மீது பாதுகாப்புப் படையினர் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்முறைக்கான பதிலடியாகத்தான் பார்க்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் நகரங்களில் நடந்தால்தான் அது நீதிக்கு உட்படுத்த வேண்டியதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கே பழங்குடியினப் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. எனவே எங்கள் பெண்களின் மாண்பை நிலைநிறுத்த நாங்கள் தாக்குதல் நடத்தினோம். இங்கேவுள்ள பழங்குடியினர் மீது பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமே இல்லாமல் நிகழ்த்தும் வன்முறைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறோம்.
வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் இயற்கை வளங்களையே அவர்கள் சுரண்டுகின்றனர்." எனக் கூறியிருக்கிறார்.
பிரேதங்களை சிதைக்கவில்லை:
"தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களை நாங்கள் சிதைத்ததாகக் கூறப்படும் தகவல் போலியானது. சில கார்ப்பரேட் ஆதரவு ஊடகங்கள் அவ்வாறு செய்தி வெளியிட்டிருக்கின்றன. இத்தகைய செயல்களை ராணுவத்தினரே செய்கின்றனர். சண்டையில் கொல்லப்படும் மாவோயிஸ்டுகள் உடல்களை சிதைப்பதும், கொல்லப்படும் பெண் மாவோக்களின் அந்தரங்க பாகங்களை புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பரப்பும் செயல்களையும் ராணுவத்தினரே செய்கின்றனர்" என்றார்.
காவல்துறை உறுதி:
மாவோயிஸ்டுகள் தரப்பில் படை வீரர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தீஸ்கர் மாநில போலீஸ் டிஜிபி டி.எம்.அவஸ்தி கூறியிருக்கிறார். மேலும், மாவோயிஸ்டுகள் கூறுவதுபோல் படைவீரர்கள் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மறுத்தார்.