

நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது கொண்ட 99 சதவீத மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஆதார் பதிவேட்டில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 111 கோடியை கடந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று முன்தினம் கூறும்போது, “ஆதார் பதிவேட்டில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குடியரசு தினத்தன்று 111 கோடியை தொட்டது. அரசு திட்டங்களில் ஆதார் எண்ணை இணைத்ததன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் ரூ.36,144 கோடி சேமித்துள்ளன. பொது விநியோகத் திட்டம், வீடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றில் இத்தொகை சேமிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் அதிக தொகை சேமிக்கப்பட்டுள்ளது. 2014-15-ல் ரூ.14,672 கோடியும் 2015-16-ல் ரூ.6,912 கோடியும் சேமிக்கப்பட்டுள் ளது. இதுவரை 47 கோடி வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்துக்கு முன் மாதத் துக்கு 60 லட்சம் கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டது. தற்போது மாதத்துக்கு சுமார் 1.8 கோடி கணக்குகளுக்கு ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
ஆதார் திட்டம் முந்தைய அரசால் தொடங்கப்பட்டபோது, அது வெறும் அடையாள ஆவணமாகவே இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், நிதி மற்றும் எதிர்கால மாற்றத்துக்கான சக்திவாய்ந்த சாதனமாக ஆதார் மாறியுள்ளது” என்றார்.
நாட்டின் மக்கள் தொகையில் 91.7 சதவீதம் பேர் பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளனர். 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய 99 சதவீத மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர். மத்திய அரசின் ஆதார் எண் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முயற்சியை இது ஊக்குவிப்பதாக அமைந் துள்ளது. மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு ஆதாரில் இணைவோர், மற்றும் ஆதார் எண்ணை பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.