

தாய்மொழி வழி பொறியியல் கல்விக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவளித்துள்ளார். இதன் அடிப்படையில் பொறியியல் பாடங்களை மொழிபெயர்ப்பவர்களுக்கு ரூ.50,000 வரை உதவித்தொகை வழங்கப்படும் என அகில இந்தியதொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
தாய்மொழி வழி தொழிற்கல்வி என்பது இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கியது.இயந்திரவியல், கட்டிடவியல் தவிர மற்ற பாடங்களில் தமிழ்வழிக் கல்வி இன்னும் வளராமல் உள்ளது. என்றாலும் இந்த அளவுகூட மற்ற மாநிலங்களில் தாய்மொழி வழி தொழிற்கல்வி இன்னும் அறிமுகமாகவில்லை.
இந்நிலையில் பொறியியல் பாடங்களை அவரவர் தாய்மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்த மஞ்சு என்பவர் கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்ட மோடி கடந்த 2015, ஜனவரி 8-ம் தேதி ஒரு ட்வீட்செய்திருந்தார்.
இதில் அவர், ''பொறியியல் பாடங்களைஅவரவர் தாய்மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் மஞ்சுவின் யோசனை ஏற்புடையது. ஆழ்ந்தபரிசீலனைக்குரியது'' என்று கூறியிருந்தார். இதுவெளியான 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமரின் கருத்தை ஏஐசிடிஇ ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஏஐசிடிஇ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''பொறியியல் பாடங்களை பல்வேறு மாநில மொழிகளில் மொழிபெயர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்'' என்றுகூறியுள்ளது.
ரூ.50,000 வரை உதவித்தொகை அளிக்கப்பட இருக்கும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 10-ம் தேதி கடைசி நாள் ஆகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில்பொறியியல் பாடங்களை மொழிபெயர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து 'தி இந்து'விடம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜாகீர் உசைன் பொறியியல் கல்லூரியின் டீன் மற்றும் துறைத் தலைவரான பேராசிரியர் முகம்மது இதிரீஸ் கூறும்போது, ''இந்த அறிவிப்பைப் பார்த்தால் பொறியியல் கல்வியை வரும் காலங்களில் அவரவர் தாய்மொழியில் வழங்கும் முயற்சியாகத் தெரிகிறது. ஆங்கில அறிவு குறைவாக உள்ள மாணவர்களுக்கு இது உதவியாக இருக்கும். தாய்மொழியில் பொறியியல் படிப்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் மாநில அரசுகளால் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இல்லாவிடில் இவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்'' என்றார்.
தாய்மொழியில் படித்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறும் மாணவர்களின் புரிதலுக்காக கடந்த ஆட்சியிலும் பட்டப்படிப்பின் அறிவியல் பாடநூல்கள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய மொழிபெயர்ப்பு இயக்கம் என்ற பெயரில் ஒரு குழு செயல்பட்டு வந்தது. இந்தக் குழு புதிய ஆட்சி வந்த பின் செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் பொறியியல் பாடங்களை மாநில மொழிகளில் மொழிபெயர்க்க ஏஐசிடிஇ அறிவிக்கை வெளியிட்டுள்ளது.