

ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாருக்கு எதிராக போதுமான ஆதாரம் இருப்பதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் ஜேஎன்யூ விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்ய குமாருக்கு எதிராக எங்களிடம் போதுமான ஆதாரம் இருக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நிச்சயமாக தேச விரோத கோஷங்களை எழுப்பியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குற்றமற்றவர் என டெல்லி போலீஸ் அறிவிக்க வாய்ப்பேயில்லை.
ஜனநாயக மாணவர் சங்கத்தின் உமர் காலீத் மற்றும் சிலரையும் போலீஸ் நெருங்கி வருகிறது. ஜேஎன்யூ நிகழ்ச்சிக்கு வெளியில் இருந்து சில அமைப்புகள் உதவியிருப்பது எங்கள் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ஜேஎன்யூ பல்கலைக்கழகம் எங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது" என்றார்.