

உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த கும்நாமி பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸா என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தீவிர விசாரணை நடத்துகிறார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், விமான விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசும் மத்திய அரசும் வெளியிட்டுள்ளன. எனினும், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வரை ‘கும்நாமி பாபா’ என்ற பெயரில் நேதாஜி உயிர் வாழ்ந்ததாக கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பல புகைப்படங்கள், பாபாவின் உடைமைகள் போன்றவற்றை ஆதாரமாக காட்டுகின்றனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கும்நாமி பாபாதான் நேதாஜியா என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கான அறிவிக்கையை உள்துறை முதன்மை செயலர் தேபாசிஷ் பாண்டா வெளியிட்டுள்ளார். இந்த ஆணையம் தீவிர விசாரணை நடத்தி தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும்.
‘‘கும்நாமி பாபா அசாதாரண மனிதர். அவர் யார் என்பது பற்றிய சர்ச்சைக்கு விடை காண உ.பி. அரசு ஆணையம் அமைக்க வேண்டும்’’ என்று கடந்த 2013-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.