

மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்எல்ஏ.க்களை திரும்ப அழைக் கும் உரிமை சட்டம் கொண்டுவர சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவளித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் தனிநபர் மசோதா கொண்டு வந்த பாஜக எம்.பி. வருண் காந்திக்கு அவர் கடிதம் எழுதி யுள்ளார்.
மக்களவையில் கடந்த மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர் வருண்காந்தி தனிநபர் மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். சரியாக செயல்படாத எம்.பி., எம்எல்ஏ.க்களை இரு வருடங்களுக்குப் பிறகு திரும்ப அழைக்கும் உரிமையை மக்களுக்கு அளிக்கலாம் எனக் கூறினார்.
“இது தொடர்பாக மக்களிடமிருந்து வரப்பெற்ற புகாரை சபாநாயகர் பரிசோதித்து தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட எம்.பி. அல்லது எம்எல்ஏ.வின் பதவி, தேர்தல் ஆணையத்தால் பறிக்கப்பட வேண்டும்” என விளக்கியிருந்தார். இதைப் பாராட்டி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நேற்று முன்தினம் வருண்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த தகவலை வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருண் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணா ஹசாரே அளித்த பாராட்டை நான் எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன். இந்த மசோதா விவாதிக்கப்பட வேண்டும் என எனது பாஜக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த முறையால் அரசியல் பொறுப் புணர்ச்சி உருவாகி ஜனநாயகம் ஆழமாக வேரூன்றி அனை வருக்கும் பலன் கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.
வருண்காந்திக்கு எழுதிய கடிதத்தில் வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் உரிமையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என அண்ணா ஹசாரே வலியுறுத்தியுள்ளார். “இவ்வாறு புறக்கணிக்கப்படும் வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடாதபடி சட்டம் இயற்றப்பட வேண்டும், ஒருவேளை ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் புறக்கணிக்கப்பட்டால் அங்கு மறுதேர்தல் நடத்திட வேண்டும்” எனவும் ஹசாரே கூறியுள்ளார்.
இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கும் உரிமை, மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை ஆகிய இரட்டை சட்டங்களை அமலாக்குவது ஒரு புரட்சிகரமான யோசனையாக இருக்கும் எனவும் ஹசாரே கூறியுள்ளார். வருண் காந்திக்கு எழுதிய இந்தக் கடித நகலை குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் ஹசாரே அனுப்பியுள்ளார்.