

அரசின் மானிய உதவி குறைக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை நேற்று முதல் உயர்ந்துள்ளது.
நாடாளுமன்ற கேன்டீனில் வெஜ் தாளி ரூ.18-க்கும் நான்-வெஜ் தாளி ரூ.33-க்கும் விற்கப்பட்டது. இவற்றின் விலை தற்போது முறையே ரூ.30 மற்றும் ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சாப்பாடு ரூ.61-ல் இருந்து ரூ.90 ஆகவும் சிக்கன் கறி ரூ.29-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மக்களவை செயலகம் நேற்று முன்தினம் விடுத்துள்ள செய்தியில், “நாடாளுமன்ற கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை, ஊடகங்களில் அவ்வப்போது விவாதப் பொருளாகிறது. இதனை கவனத்தில் கொள்ளுமாறு நாடாளுமன்ற உணவுக் குழுவுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவுக் குழு அளித்த பரிந்துரையின் பேரில் சபாநாயகர் பல்வேறு முடிவுகள் எடுத்துள்ளார். நாடாளுமன்ற கேன்டீன் இனி லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை என்ற அடிப்படையில் செயல்படும் என்பதே இதில் முக்கிய முடிவாகும்.
இதன்படி பல்வேறு உணவுப் பண்டங்களின் விலை அவற்றின் தயாரிப்பு செலவுக்கு இணையாக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
எம்.பி.க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பார்வையாளருக்கு இந்த விலை உயர்வு பொருந்தும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை இனி அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும்” என்று கூறப்பட்டிருந்தது.
விலை மலிவுதான்
இந்நிலையில் நாடாளுமன்ற கேன்டீனில் உணவுப் பண்டங்களின் விலை மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் அவற்றின் விலை மலிவுதான் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கேன்டீனில் மட்டன் பிரியாணி ரூ. 100 ஆகவும் நான்-வெஜ் கறி ரூ. 30 முதல் ரூ.45 வரையும் உயர்ந்துள்ளது. இதே உணவு வெளியில் சராசரியாக ரூ.200-க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.