

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் தண்டனைக் குறைப்புக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தண்ட னையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. அவர்களுடன் வழக்கில் தொடர்புடைய ஜெயகுமார், ராபர்ட் பயஸ், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரையும் சேர்த்து ஏழு பேரின் தண்டனையை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்ததால், தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. மாநில அரசு உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று மத்திய அரசு சார்பில் குற்றம் சாட்டப் பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப் பட்டது.
தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு விவரம்:
இதுபோன்ற சிக்கலான வழக்கை முதல்முறையாக உச்ச நீதிமன்றம் சந்திக்கிறது. எனவே இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்து முடிவு செய்ய கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்படுகிறது. கீழ்க்கண்ட விஷயங்கள் குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்.
தண்டனைக் குறைப்பு அதிகாரம் அரசியல் சட்ட பிரிவு 72-ன் படி குடியரசுத் தலைவர், 161-ன் படி மாநில ஆளுநர், 32-ன் படி நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் உள்ளது. இதில் ஓர் அதிகாரத்தை பயன்படுத்திய பிறகு மீண்டும் இன்னொரு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா?
ஒரு வழக்கின் மீது இரண்டு அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? இந்த அதிகாரத்தை மத்திய அரசு, மாநில அரசு என இரண்டு அரசுகள் பயன்படுத்த நினைக்கும்போது, யாருடைய அதிகாரம் செல்லும்?
தண்டனைக் குறைப்புக்கு ஆளான ஒருவர் ஆயுள் தண்ட னையை அனுபவித்து வரும் நிலையில் தொடர்ந்து எஞ்சிய காலத்துக்கும் சிறையில் இருக்க வேண்டுமா? ஷிரத்தானந்தா வழக்கில் 14 ஆண்டுகள் என்ற சிறப்பு தண்டனை பிரிவை உருவாக் கலாம். அதில் தண்டனைக் குறைப் புக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அளிக்கப்பட்டுள்ள உத்த ரவை கருத்தில் கொள்ளலாமா?
மாநில அரசு தன்னிச்சையாக தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா? முடியும் என்றால், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றுவது கட்டாயமா? இந்த சட்டபூர்வ கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியது நாட்டுக்கே அவசியம். இதை அரசியல் சாசன அமர்வு ஆராயும். இந்த வழக்கு மூன்று மாதங்களுக்குள் அரசியல் சாசன அமர்வுக்கு பட்டியலிடப்படும்.
இந்த வழக்கு முடியும்வரை, முன்பு பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் தொடரும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இந்த தீர்ப்பால் முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவு தொடரும். ஆனால் வழக்கு முடியும் வரை அவர்கள் உள்பட ஏழு பேரும் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.