

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2013-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்தது.
வரும் 2018-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற, தனது அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் வகையில் விளம்பரங்கள் வெளியிட முடிவெடுத்துள்ளார்.
அதன்படி அடுத்த 2 ஆண்டு களுக்கு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், சமூக வலைதளங்கள், விளம்பர வேன்கள், மேடை நாடகங்கள் ஆகியவற்றுக்காக ரூ. 84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன்மூலம் முதல் ஆண்டில் ரூ. 39 கோடியும், 2-ம் ஆண்டில் ரூ.45 கோடியும் செலவிடப்படும் என நிதித்துறை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி நகரப்பகுதி இளம் வாக்காளர்களை கவரும் வகையில் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் சித்தராமையா பெயரில் புதிய கணக்குகள் தொடங்கப்படுகின்றன.
இதே போல கிராமங்களில் நாடகங்கள் நடத்தவும், வேன் களில் பிரச்சாரங்களில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. சித்த ராமையாவின் இந்த திட்டத்துக்கு கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.