

ராஜஸ்தானில் பாஜக மகத்தான வெற்றி பெறும் நிலையில், சட்டமன்றத் தேர்தல்களில் பெற்றுள்ள எழுச்சிக்கு குஜராத் முதல்வரும், கட்சியின் பிரதமர் வேட்பாளருமான மோடி மிக முக்கியக் காரணம் என்று வசுந்தரா ராஜே தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளரான வசுந்தரா ராஜே, பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் செய்தியாளர்களிடம் கூறியது:
"காங்கிரஸின் நிர்வாகத் திறமையின்மையையே ராஜஸ்தான் முடிவுகள் காட்டுகின்றன. டெல்லியிலும் இதே நிலைதான். ஆகவே, குஜராத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மோடி, இந்த முடிவுகளுக்கு மிக முக்கியக் காரணியாக இருந்திருக்கிறார்.
மாநிலங்களில் மட்டுமின்றி, மத்தியிலும் பாஜக ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதில், மோடிக்குப் பெரும் பங்கு உண்டு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இது அரையிறுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார் வசுந்தரா ராஜே.