எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேசத் தயார்: மத்திய அரசு அறிவிப்பு

எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேசத் தயார்: மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். அதை சாதகமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் உளவுத் துறை காஷ்மீரில் கலவரத்தை தூண்டி வருகிறது. புர்ஹான் வானிக்கு தியாகி பட்டம் சூட்டி அவரது மறைவை கருப்பு தினமாக பாகிஸ்தான் அரசு அனுசரித்தது.

இந்தப் பின்னணியில் காஷ்மீர் பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அந்த நாட்டு வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷ் நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகிய பிரச்சினைகள் குறித்து மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம், காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தார்.

இதே விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எல்லை தாண்டிய தீவிர வாதத்தை பாகிஸ்தான் ஊக்கு வித்து வருகிறது. அந்த நாட்டில் இருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதி கள் ஊடுருவி வருகின்றனர். மேலும் மும்பை தாக்குதல், பதான்கோட் விமானப் படைத் தாக்குதல் உட்பட தீவிரவாத பிரச்சினைகள் குறித்து மட்டும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.

இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் ஹபீஸ் சையது, சையது சலாலுதீன் ஆகியோருக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in