

சபரிமலை கோயிலுக்குள் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண் பக்தர்களையும் அனுமதிக்கலாம். ஏனெனில் ஐயப்பன் பெண் வெறுப்பு கொண்டவர் அல்ல. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. அது புனிதமாகவே கருதப்படவேண்டும் என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கூறியிருக்கிறார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் 41 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடியுடன் வரும் ஐயப்ப பக்தர்கள் மட்டுமே 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கபடுகின்றனர்.
கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்விவகாரத்தில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுப்பது ஏன்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அரசமைப்பு சட்டத்துக்கு மாறாக கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன், "ஐயப்பக் கடவுள் பிரம்மச்சாரி. அதனாலேயே அவர் பெண்களை வெறுப்பவர் ஆகிவிட மாட்டார். சபரிமலையில் பெண் கடவுள் மலிகாபுரத்து அம்மனுக்கு அருகிலேயே அவர் இடம் கொடுத்திருக்கிறார். மாதவிடாய் இயற்கையின் விளைவு. அதன் காரணமாகத்தானே இந்த மனித குலம் உயிர்ப்புடன் இருக்கிறது. எனவே மாதவிடாய் புனிதமாக கருதப்பட வேண்டும். இந்து சமூகம் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட அனைத்தையுமே வரவேற்று ஏற்றுக்கொள்கிறது. எனவே இயற்கை உபாதையான மாதவிடாயைக் காரணம் காட்டி பெண் பக்தர்களை தடுக்கக் கூடாது" எனக் கூறியிருக்கிறார்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாத விவாதங்கள் நடைபெறும் நிலையில் கேரள பாஜக பொதுச் செயலாளரின் இந்த கருத்து மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சுரேந்திரன் தனது முகநால் பக்கத்தில் ஒரு பதிவில், "சபரிமலை கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்களை அனுமதிக்கலாம். நவம்பர் முதல் ஜனவரி வரை மட்டுமே பக்தர்களை அனுமதிப்பதால் ஏற்படும் நெரிசலை தவிர்க்கலாம்" என குறிப்பிட்டிருக்கிறார்.
இதே கருத்தை கேரள முதல்வர் பினராய் விஜயனும் முன்வைத்தார். ஆனால், கேரள அரசியல் கட்சிகள் மத்தியில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.