

காஷ்மீர் மாநிலத்தில் 25-வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) போராட்டமும் ஊரடங்கு உத்தரவும் தொடர்கிறது.
காஷ்மீரில் கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்தன. ஜூலை 9-ம் தேதி முதல் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்வீச்சு போராட்டங்களைக் கட்டுப்படுத்த மத்திய படைகள் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்தியதில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 49 என்ற நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. இருப்பினும் தலைநகர் ஸ்ரீநகரில் வெகு சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. 3 வாரங்களுக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு போக்குவரத்து தொடங்கியது.
ஆங்காங்கே இயல்பு நிலை திரும்பியிருந்தாலும். பரவலாக பல இடங்களில் இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மருத்துவமனைகள், குடிநீர் வழங்கல், மின் வாரியம், உணவு வழங்கல், தீயணைப்பு, காவல்துறை போன்ற அடிப்படை சேவைத் துறைகளைத் தவிர மற்ற சேவைகள் முடங்கியுள்ளன. ரயில் போக்குவரத்து இன்னமும் முடங்கியே இருக்கிறது. வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தபால் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.