

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியலில் திருநங்கைகளை பயனாளிகளாக சேர்த்து ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திருநங்கை களுக்கான பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, கடந்த மே 29-ம் தேதி சமூக பாதுகாப்புத் துறைக்கு இதுதொடர்பான உத்தரவை முதல்வர் நவீன் பட்நாயக் பிறப்பித்துள்ளார்.
இதன்மூலம் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் திருநங்கைகளும் பயன்பெற முடியும். கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்டப்பூர் வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் மேற்கண்ட நடைமுறையுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக பாதுகாப்புத் துறை செயலாளர் நிதின் சந்திரா கூறும்போது, “வறுமைக்கோட்டு பட்டியலில் ஒருவர் இணைக்கப்பட்டால், அவர் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களிலும் பயன்பெற முடியும். உணவு தானியம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி என அனைத்து திட்டங்களிலும் அவர் பயனாளியாக முடியும். தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவொரு மாநிலத்திலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியலில் அவர்கள் இணைக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
அனைத்து ஒடிசா மூன்றாம் பாலினத்தவர் நல அறக்கட்டளை தலைவர் மீரா பரிடா கூறும் போது, “இதற்காக பல ஆண்டுகளாக போராடி வந்தோம். வறுமைக்கோட்டுக்கு கீழ்வாழ்பவர்கள் பட்டியலில் நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளை ஒடிசா இணைத் துள்ளது. இந்த நடவடிக்கை ஒடிசாவில் உள்ள திருநங்கைகளின் வாழ்வில் மட்டுமின்றி நாட்டிலுள்ள திருநங் கைகளின் வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். வறுமைக்கோட்டு அட்டை வழங்குவது, திருநங்கைகளை மேம்படுத்துவதன் முதல் கட்டம். நலத்திட்ட உதவி பெறுவது தவிர, கல்வி கற்கவும் வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எனினும் இன்னும் ஏராளமானவற்றைச் செய்ய வேண்டியுள்ளது. திருநங்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
ஒடிசாவில் உள்ள திருநங்கைகளின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை. எனினும், சுமார் 40 ஆயிரம் திருநங்கைகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 4,000 பேர் ‘இதர’ பாலினமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.