

மகாராஷ்டிர மாநிலத்தில் கமாண்டோ படையினர் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கையில் நக்சல் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்குள்ள கோந்தியா மாவட்டம் பெட்காதி கிராமத்தில் நேற்று அதிகாலை நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெட்காதி கிராம வனப்பகுதியில் நக்சல் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை இரவே அங்கு சி-60 கமாண்டோ படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இரவு முழுவதும் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் கமாண்டோ படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து கமாண்டோ படையினரும் பதிலடி நடவடிக்கையை மேற்கொண் டனர்.
இருதரப்புக்கும் இடையே நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடல் கட்சிரோலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட நக்சல்களை அடையாளம் காணும் பணி தொடங்கியுள்ளது என போலீஸ் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர ஜோஷி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நக்சல் வேட்டைகளில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் கைது
சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் 2 நக்சல்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள். நக்சல் அமைப்பில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வந்தனர் என்று சத்தீஸ்கர் மாநில போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.