

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், விமானத்தில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஏர் இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர கெய்க்வாட் கடந்த 23-ம் தேதி புனேயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்றபோது, சொகுசு வகுப்பில் பயணிக்க முடியாமல் போனது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஏர் இந்தியா நிறுவன உதவி மேலாளரை காலணியால் அடித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கெய்க்வாட் விமானங்களில் பயணம் செய்ய ஏர் இந்தியா நிறுவனமும் பிற விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
இந்நிலையில் நடந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜுக்கு ரவீந்திர கெய்க்வாட் நேற்று கடிதம் எழுதினார். அதில், மார்ச் 23-ம் தேதி நடந்த துரதிருஷ்டவசமாக சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில் ரவீந்திர கெய்க்வாட், விமானத்தில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடையை உடனடியாக திரும்பப் பெறுவதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து வந்த எழுத்துப்பூர்வ உத்தரவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா தனது ஊழியர்கள் தாக்கப்படாமல் மற்றும் அவமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். அனைத்து ஊழியர்களின் கண்ணியத்தை காக்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, “கெய்க்வாட்டுக்கு எதிரான போலீஸ் விசாரணை தொடரும். எதிர்காலத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நடந்துகொள்வேன் என அவர் உறுதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன” என்றார்.
ஏர் இந்தியாவின் இந்த நடவடிக்கையை மற்ற விமான நிறுவனங்களும் பின்பற்றும் என விமானப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்துக்கு பிறகு ரவீந்திர கெய்க்வாட் நேற்று முன்தினம் முதல்முறையாக நாடாளுமன்றம் வந்தார். அப்போது நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறிய அவர் ஏர் இந்தியா அதிகாரிகள் தான் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார். நடந்த சம்பவத்துக்கு நாடாளுமன்றத்தி்ல் மன்னிப்பு கோருவதாகவும் ஆனால் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் மன்னிப்பு கோர மாட்டேன் என்றும் கோரினார்.
எனினும் அப்போது அவையில் இருந்த விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு சாதகமான பதிலை அளிக்காததால், சிவசேனா எம்.பி.க்கள் அவரை சூழந்துகொண்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு அமைதி ஏற்படுத்தினார். அப்போது அவர், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு பேச்சு நடத்துவார்” என உறுதி அளித்தார்.