

இஸ்லாமிய முறைப்படி ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினால் 3 முறை ‘தலாக்’ என்று கூறி பிரியும் முறை நடைமுறையில் உள்ளது. இதை ‘முத்தலாக்’ என்கின்றனர்.
இத்துடன் விவகாரத்து செய்த தம்பதிகள் மீண்டும் இணைய விரும்பினால், அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து, பிறகு அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னரே முதல் கணவரை அடைய முடியம் என்ற ‘நிக்காஹ் ஹலாலா’ என்ற வழக்கமும் நடை முறையில் உள்ளது. இவ்விரு வழக்கங்களுக்கும் முஸ்லிம் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இவற்றை தடை செய்யக் கோரி முஸ்லிம் பெண்கள் மற்றும் மகளிர் அமைப்பு கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சாதகமாக கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம்களின் உயரிய அமைப்பாகக் கருதப் படும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் கடந்த மார்ச் 16-ம் தேதி ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதில் இவ்விரு தவறான முறைகளை கடைபிடிக்க வேண்டாம் எனவும் அவ்வாறு கடைபிடிப்பவர்களை முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. எனினும் இதை மீறி உ.பியில் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சீத்தாபூர் மாவட்டத்தின் லஹர்பூர் காவல் நிலையத்தில் ஷாஹீன் பேகம் என்பவர் சில தினங்களுக்கு முன் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் மணமாகி 8 ஆண்டுகளாக தனது கணவர் முகம்மது ஜுபைத் தன்னைச் சித்திரவதை செய்துவருவதாக கூறியுள்ளார். இதனால், ஆத்திர மடைந்த ஜுபைத் மூன்றுமுறை தலாக் கூறி ஷாஹீனை கடந்த 18-ம் தேதி விவாகரத்து செய்து விட்டார். பிறகு தனது தவறை உணர்ந்த ஜுபைத் மீண்டும் ஷாஹீனை மணமுடிப்பதற்காக அவரை நிக்காஹ் ஹலாலா முறையை பின்பற்றுமாறு கூறியுள்ளார். இதைப் பின்பற்றிய ஷாஹீனை தற்போது ஜுபைத் மணமுடிக்க மறுத்துவிட்டார்.
உ.பி.யில் மற்றொரு சம்பவ மாக, அம்பேத்கர் மாவட்டத்தின் ஜமாலுதீன்பூரில் சபீனா காத்தூன் என்ற பெண், மணமான 3 ஆண்டுகளுக்குப் பின் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப் பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் பணியாற்றும் இவரது கணவர் முகம்மது கவுசர் சில தினங் களுக்கு முன் சபீனாவின் மொபைலுக்கு ‘தலாக்’ என மூன்று முறை குறுஞ்செய்தி அனுப்பியுள் ளார். நேற்று முன்தினம் சொந்த ஊருக்குத் திரும்பிய கவுசர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
சபீனா கொடுத்த போலீஸ் புகாரின் பேரில் கவுசர் விசா ரணைக்கு அழைக்கப்பட்டார். முத்தலாக் முறை இஸ்லாத்தில் இருப்பதாகக் கூறியதால் அவரை போலீஸார் அனுப்பி விட்டனர். இதுபோல், உ.பி.யின் ராம்நகர், சம்பல் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் நான்கு சம்பவங்கள் நடை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் ஜாபர்யாப் ஜீலானி ‘தி இந்து’விடம் கூறும் போது, “நீங்கள் கூறும் சம்பவங் களில் சில எங்கள் கவனத்துக்கும் வந்தன. அதில் தவறு செய்தவர் களை அப்பகுதி முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என தகவல் அனுப்பியுள்ளோம். இது போன்ற சமூகப் புறக்கணிப்பு நடவடிக்கையை மசூதிகளில் தொழுகைக்கு முன்பாக இமாம்கள் அளிக்கும் சொற்பொழிவுகளிலும் எடுத்துக்கூற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. சமூக இணையதளங்கள் முத்தலாக், நிக்காஹ் ஹலாலா தொடர்பான நடைமுறை தவறானது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர் சிலர் உ.பி. முதல்வர் யோகி அதித்யநாத்திடம் முறையிட முயன்று வருகின்றனர்.